பிரபு பயோடேட்டா
பிரபு
நடிகர் | தயாரிப்பாளர்பிறந்த தேதி 30 Dec 1956
வயது : 63 ஆண்டு
பிரபு பயோடேட்டா
பிரபு புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்தவற்றுள் தமிழ்மொழி திரைப்படங்களே அதிகம். இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ஆவார். சங்கிலி திரைப்படத்தில் இருந்து நடித்துவரும் இவர் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் உருவான சின்னத் தம்பி திரைப்படத்திற்காகப் பெற்றார். கும்கி, அரிமா நம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் விக்ரம் பிரபு இவரது மகனாவார்.பெங்களூருவில் உள்ள பிஷப் காட்டன் பள்ளியில் படித்து முடித்த பிறகு, அவரது மாமா வி. சி. சண்முகம் தயாரித்த திரைப்படங்களில் அவருடன் இணைந்து நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றினார். திரைப்படத் தயாரிப்பில் உள்ள நுணுக்கங்களை இவர் சிறந்தமுறையில் கற்றார். படப்பிடிப்பின்போது கலைஞர்கள் அமர நாற்காலிகள் எடுத்துபோடுவது வரையான அனைத்து வேலைகளையும் இவர் செய்தார். பிரபுவின் தந்தையான நடிகர் சிவாஜி கணேசன், பிரபு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பத்தில் தயக்கம் காட்டினார். ஆனால் பிரபுவின் நடிப்புத் திறமையைப் பார்த்து பல தயாரிப்பாளர்களிடம் இருந்து புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தன.
பிரபுவின் பெற்றோர் நடிகர் சிவாஜி கணேசன், கமலா ஆவார்கள். இவரது மூத்த சகோதரர் ராம்குமார், திரைப்படத் தயாரிப்பாளராவார். இவருக்கு சாந்தி மற்றும் தேன்மொழி என இரண்டு சகோதரிகள் உள்ளனர். இவர் புனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். இவரது மகனான விக்ரம் பிரபு, 2012வது ஆண்டில் வெளியான கும்கி திரைப்படத்தின் வாயிலாக நடிகராக அறிமுகமானார்.